நாம் அனைவரும் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகள் தான் – லூக்கா 8:19 – 21

போதகர் இயேசுவை உங்களுக்குத் தெரியுமா? என்று பட்டணங்கிலும் கிராமங்களிலும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்த காலம்.

இயேசு எங்குசென்றாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரைப் பார்க்கவும், அவர் சொல்வதைக்கேட்கவும் ஆவலுடன் மக்கள் திரளாய் கூடினார்கள்.

இயேசுவின் போதனைகள் மற்ற பிரபலமான போதகர்களைக் காட்டிலும் மிகவும் வேறுபட்டிருந்தது. இயேசுவின் போதனைகள் அருமையான கதைகள் உவமைகள் மற்றும் சமகால நிகழ்வுகளையும் கொண்டிருந்தது. இவை சாதாரண மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

என் குடும்பத்தினர் யார் யார்?

இந்த ஊரிலும் அப்படித்தான். இயேசுவை சுற்றி அலைத்திராலான மக்கள் கூட்டம். ஒரே நெரிசல்.  

அப்போது அவரைப்பார்க்க அவரின் தாயும் சகோதரர்களும் வந்தார்கள். ஆனால் அவர்களால் அவரை பார்க்கவும் முடியவில்லை பேசவும் முடியவில்லை. கூட்ட நெரிசலால் அவரை நெருங்கவே முடியவில்லை.

அவரின் குடும்பத்தினர் வந்த செய்தியை ஒரு சிலர் இயேசுவிடம்  சொன்னார்கள். “என் தாயும் என் சகோதரர்களும் கடவுளின்வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள்” என்று அவர் அவர்களைப்பார்த்து கூறினார்.

ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

இந்த பார்வை ஒரு முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டம். இல்லையா?

பொதுவாக குடும்ப உறவுகள் அனைத்தும் பிறப்பு அல்லது இரத்தத்தால் தொடர்புடையவையாக தான் இருக்கும். ஆனால் நாம் யார் என்பதை வரையறுக்கின்றன குடும்ப உறவுகளையும், குடும்பத்துடனான நம் உறவையும் மறுபரிசீலனை செய்ய இயேசுவின் வார்த்தைகள் சவால் விடுகின்றது. 

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யார்? உங்கள் குடும்பத்தை எப்படி வரையறுக்கிறீர்கள்? இரத்தம் மற்றும் பிறப்பால் மட்டுமே குடும்பம் உருவாகிறதாஅல்லது ஆன்மீகத்தின் அடிப்படையிலும் கூட அதை உருவாக்கமுடியுமா? என்கின்ற வினாவை லூக்கா 8:19-21 எழுப்புகிறது.

கடவுளுடைய வார்த்தையைக்கேட்டு நடப்பவர்கள் என்னுடைய தாயும் சகோதரர்களும் ஆவர் என்று இயேசு சொல்லுகிறார். ஆகவே ஆன்மீகத்தின் அடிப்படையில் குடும்பத்தை ஒழுங்கமைக்க முடியும் என்று இயேசு நமக்கு போதிக்கிறார். இயேசுவைப் பின்பற்றி நேசிக்கும் எவரும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்.  

கூட்டுக்கூடும்பம்

இந்தப் போதனை நமது சபைகளுக்கும்பொருந்தும். திருச்சபை ஒரு கூட்டுக்கூடும்பம். திருச்சபை என்பது ஜாதி, குலம், கோத்திரம் என்று எல்லாம் இருக்கக் கூடாது.இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்கள் அனைவரும் திருச்சபை என்னும் குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஆவர். 

மேலும் குடும்பத்தைக் குறித்த பொதுவான புரிதலிலிருந்து ஒரு ஆன்மீகப் புரிதலுக்கு நம்மை இப்பகுதி வழிநடத்துகிறது.

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு.

இயேசுவின் வார்த்தையைக் கேட்பவரையும்  அதை நடைமுறைப்படுத்துபவரையும் மற்றும் அவர்மேல் உள்ள நம்பிக்கையில் நம்மை  வளர்ப்பவர்களையும் நம் குடும்பமாகக் கருதும்படி லூக்கா 8:19-21 அழைப்பு விடுகிறது.  

இப்போதனை முற்றிலும் புரட்சிகரமானது! நமது பாரம்பரியங்களுக்கும் பழைய மரபுகளுக்கும் இது ஒரு சவால் விடுக்கும் போதனையாகும்.

லூக்கா 8:19-21 இயேசுவை பின்பற்றுபவர்கள் ஒரு குடும்பமாகச் சமூகமாக இருப்பது பற்றியது. இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு. இக்குடும்பம் அவருடைய போதனைகளைக் கேட்டு அவற்றைச் செயல்படுத்துபவர்களைக் கொண்டுள்ளது. இயேசுவை நேசித்து சேவை செய்பவர்கள் நமது நெருங்கிய உறவினர்களைப் போன்றவர்கள்.

நாம் அனைவரும் ஒரே குடும்பம் தான். இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்கள் தான்.

—————————————————

அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார் – யோவான் 1:12

விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு…கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல்எழுதுவது – 1 தீமோத்தேயு 1:1

முதியோரிடம் கடுமையாய் இராதே. அவர்களைத் தந்தையராக மதித்து ஊக்குவி. இளைஞர்களைத் தம்பிகளாகவும், வயது முதிர்ந்த பெண்களை அன்னையராகவும், இளம் பெண்களைத் தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும்கருதி அறிவுரை கூறு – 1 தீமோத்தேயு 5: 1 – 2

Leave a Reply

%d