ஒரு மாற்றத்தின் கதை (லூக்கா 8:26 – 39)

மனித நிலையின் பல பரிமாணங்களை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் ஏராளம்.

இயேசு கதரேனருடைய நாட்டில் ஒரு பித்து பிடித்தவனைக் குணப்படுத்தியச் சந்திப்பு ஒரு அரிய நிகழ்வு என்றால் அது மிகையாகாது.

இயேசு யூதர் அல்லாத பகுதிக்கு எதற்காகச் சென்றார்? இது நமக்குச் சொல்லப்படவில்லை. ஆனால் இயேசு அக்கரைச் சென்றவுடன் அலங்கோலமாக இருந்த ஒரு மனிதனைக் கண்டார். ஒருவேலை அவனைக் குணப்படுத்த அவர் திட்டமிட்டே கூடச் சென்றிருக்கலாம். 

எங்குச் சென்றாலும் பெருங்கூட்டம் இயேசுவைப் பின்தொடர்ந்தது. ஆனால் அவர் தனிப்பட்டவர்களைச் சந்திக்க தயங்கியதுமில்லை தவறியதுமில்லை தவிற்ததுமில்லை. எந்நாளும் நடப்பதுதான் இன்றும் நடந்தது.

கதரேனருடைய நாட்டில் இயேசு ஒரு தனி ஒருவனைக் குணமாக்கி மீட்டார். இந்தக் கதை மனித நிலையின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது.

நம் போராட்டங்களின் மொத்த உருவம்

 அங்கே இயேசு சந்தித்த மனிதன் மிகுந்த பரிதாபத்துக்குரியவன். அவன் ஆடைகளைக் களைந்து தனிமையே கதி என்று சுற்றி திரிந்தான். கதரேனருடைய நாட்டைச் சுற்றியிருந்த வனாந்திர பகுதிகளில் உள்ள பல கல்லறைகளிலே தங்கியிருந்தான்.

இக்கதையின் “கல்லறைகள்” தனிமையின்  அடையாளக் குறியீடாகும். மனித விரக்தியின் ஆழத்தை இக்கல்லறைகள் அழுத்தமாக வலியுறுத்துகின்றன. உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நடக்கும் மனித போராட்டத்தின் மொத்த உருவம் தான் இவன். 

நாம் அன்றாடம் கடந்து செல்லும் பல்வேறு போராட்டங்களை அவணது தனிமையும் வேதனையும் அடையாளப்படுத்துகிறது. நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களில் மாற்றம் வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

 உங்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தனிமைப்படுத்தும் சவால்கள், போராட்டங்கள் என்ன? இவைகளை உணர்வது தான் நாம் முழுமையடைவதற்கான முதல் படியாகும். 

சமூகத்திலிருந்து அந்நியப்படுதல்

வீட்டில் வாழாத இவன், தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வான். தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் பயமுறுத்துவான். கையையும், காலையும் சங்கிலியால் கட்டி, காவலில் வைத்திருந்த போதுங்கூட, அவன் சங்கிலிகளை உடைத்து எறிந்து விடுவான். இது ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை இல்லையா? சோகமானதும் கூட.

தனிமை, வேதனை, பயம், போன்றவை சமூகத்தில் உள்ள குழப்பங்களின் வெளிப்பாடே! ஒருவன் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டால் அது அவனுடைய ஆழ்ந்த வேதனையின் அறிகுறி. இந்தச் சமூக விரிசல்களை சரி செய்வதின் கட்டாயத்தை உணராமல் இருப்பது தான் நம்முடைய பேரழிவின் ஆரம்பம்.

இக்கட்டிலும் மாற்றம் சாத்தியமே 

உடல், ஆன்மீகம், அல்லது மன ரீதியான முழுமைக்காக நாம் அனைவரும் ஏங்கித்தவிக்கிரோம் இல்லையா? இந்த முழுமையான மாற்றம் நமக்குச் சாத்தியம் தானா?

இக்கதையில் படகின் வருகை நமக்கு நம்பிக்கையை அடையாளப்படுத்துகிறது. இயேசு இந்தப் பித்து பிடித்தவனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றினார். அவன் உடனடியாக மனத்தெளிவடைந்தவனாய் உடைஉடுத்தி இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருந்தான். இது அவன் திருந்திதற்கான வெளிப்படையான அத்தாட்சி. 

இயேசுவின் வருகை புத்துயிர்க்கான கடவுளின் அருளை குறிக்கிறது. இயேசு படகில் வந்த “ஏரி” இக்கதையின்  “கல்லறைகள்” போல் ஒரு குறியீடாகவும்  செயல்படுகிறது. ஒருபுறம் “கல்லறைகள்” விரக்தியின் நிலையைக் குறிக்கின்றன. மறுபுறம், “இயேசு இவ்வனாந்திர பகுதிக்கு வருவது” நம்பிக்கையின்  நிலையைக்  குறிக்கிறது. “ஏரி” இவ்விரண்டிற்கும் நடுவே ஒரு ‘நுழைவாயிலாக’ காணப்படுகிறது. இக்குறியீடுகள் இக்கதையின் உள்ளர்த்தங்களோடு மிக அழகாக இணைக்கப்பட்டுள்ளன.

இக்கதை  “பரிதாபம்”, “திகில்”, “பிரமிப்பு”  போன்ற பல உணர்ச்சிகளைத் உள்ளடக்கியுள்ளது. . இக்கதையின் ஆரம்பத்தில்  நாம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் விரக்தியை பற்றியும் உறவுகளின் முறிவைப்பற்றியும் தெரிந்துக் கொள்கிறோம். 

மேலும், தனி ஒருவனின் வாழ்க்கையில் ஒரு முழுமையான மாற்றத்தை இயேசு ஏற்படுத்தும்போது, ஒருவித “பிரமிப்பு” ஏற்படுகிறது. இத்தகைய மாற்றம் நம் எல்லோருக்கும் சாத்தியமாகும் என்கின்ற  “நம்பிக்கையும்” பிறக்கிறது.

இயேசு நமக்கானவர்

மனித நிலையின் பல பரிமாணங்களை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் ஏராளம்.

நம்மைத் தனிமைப்படுத்தும் சொந்த சவால்கள் மற்றும்  சிரமங்களைச் சமாளிப்பதற்கான ஆன்மீக வழிகாட்டுதலை நாம் தீவிரமாகத் தேடுவது அவசியம். இயேசு நமக்கு இரங்குவாரா? இது சாத்தியமா?

கதரேனருடைய நாடு பெரும்பாலும் யூதர் அல்லாத பிற இனத்தார் வாழ்ந்துவந்த பகுதி. இந்தப் பகுதியில் தான் இந்த அற்புதமான நிகழ்வு நடைபெறுகின்றது. இயேசு எல்லோருக்கும் ஆனவர் என்பதை லூக்கா முன்னெடுக்கிறார். 

இயேசு ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினருக்கு அல்லது சமூகத்திற்கு மட்டும் சொந்தம் அல்ல. அவருடைய பணி உலகளாவியது  என்பதை இப்பகுதி சுட்டிக்காட்டுகிறது.  இயேசு அனைவருக்கும் பொதுவானவர். நமக்கானவர். எனவே இக்கூற்று முக்கியமான ஒன்று. அவர் நம் அனைவரின் தனிமையையும் சமூக குழப்பங்களையும் மாற்றக்கூடிய திறனுடையவர்.

மாற்றத்தை முன்னேற்றுவது எப்படி?

இயேசு எல்லையற்ற இரக்கத்தை கொண்டவர். மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் கூடத் தனிநபர் மற்றும் சமூக மாற்றத்தை இயேசுவால் சாத்தியபடுத்த முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது. 

மேலும், இது ஒரு தனிநபரின் குணப்படுத்தலை மட்டும் கூறாமல் சமூகத்தின் மறுசீரமைப்பையும் பற்றியும் இது விவரிக்கின்றது. இந்த மாற்றத்தை முன்னேற்றுவது எப்படி? 

மாற்றத்தை அனுபவித்த பிறகு, நாம் பயனுள்ள முறையில் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைய வேண்டும். நம்முடைய  தனிப்பட்ட திறமைகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் செய்தால் சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

மனம்திருந்திய அவனுக்கு மாறுதல் எப்படி நடந்தது என்பதைப் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டான். மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கு அல்லது உதவுவதற்கு நம்முடைய சொந்த கதையினை பகிர்ந்துகொள்ளத் தயங்க கூடாது.

முழுமையான குணமடைய தேவ நம்பிக்கையும் இயேசுவின் இரக்கமும் மிக முக்கியம். மாற்றம் அனைவருக்கும் சொந்தம் தான். 

மாற்றம் சாத்தியமே. இக்கட்டிலும் மாற்றம் சாத்தியமே!

Leave a Reply

%d